| 9 comments ]


பெயர்: க. தங்கமணி பிரபு

ஊர்: பல்லடம், கோவை மாவட்டம். இப்போ 11 வருடமாக சென்னையில்வாழ்கிறேன்.

குடும்பம்: எனக்கு தேவையான அளவுக்கு சுதந்திரம் கொடுத்த அப்பாவையும், எழுதுவதை எனக்கு அறிமுகப்படுத்திய சின்ன அண்ணனையும் தவறவிட்டுவிட்டேன்.
என் வாசிப்புப் பழக்கத்திற்கு காரணமான பெரிய அண்ணன் கல்யாணசுந்தரம் ஊரில் பாத்திரக்கடைக்காரர். அண்ணி கார்குழலிதான் எங்கள் வீட்டுக்கு பெண்பிள்ளை. அண்ணன் மகன் தீபக் விக்னேஷுக்கு நான் எதிரியா, நண்பனா, சித்தப்பனா என்பது எங்கள் இருவருக்குமே புரியாதது! இங்கே சென்னையில் என்னுடன் இருக்கும் அம்மாவுக்கு நான் பலவருடமாக உருண்டு புரளும், உதைத்துத்தள்ளும் கர்ப்பபைக் குழந்தை!

சுயகுறிப்பு: விவசாயப் பாரம்பரியம், ஆனால் எங்களுடையது பாத்திரக்கடை. . பகுத்தறிவுக் குடும்பம், ஆனால் அம்மா மட்டும் சாமி கும்பிடுவார். படித்தது இங்கிலீ்சு மீடியம், ஆனால் பிடித்தது தமிழ். முடித்தது பிளாஸ்டிக் தொழில்நுட்பம். ஆனால் சிறிதுகாலம் மட்டும் பொறியியலில் குப்பை கொட்டிவிட்டு தேசிய நாடகப்பள்ளியின் பலவிதமான பட்டறைகளில் உருப்பெற்று மஞ்சாபையுடன் சென்னை வந்துவிட்டேன்.

திரு ரமேஷ் பிரபாவின் கேலக்ஸியில் சிலகாலம் வேலை பார்த்துவிட்டு, ஒரு உப்புமா சினிமா கம்பேனிக்குப் போய் கொடுமைப்பட்டு நொந்தபிறகு, சன் டி.வியில் 4வருடம் வேலை பார்த்தேன். அங்கே சன், கே மற்றும் சூர்யா டிவிகளில் சுமார் 800 நிகழ்ச்சிகளின் இயக்குனன். அதன் பிறகு இயக்குனர் திரு. பி.வாசுவிடம் 2 படங்களில் உதவி இயக்குனன். கோலங்கள் தொலைக்காட்சி தொடரில் நடிகனாக உள்ளே போய் பிற்பாடு அதன் இயக்குனர் திரு. திருச்செல்வத்திடம் சுமார் 9 மாதம் அசோசியேட் டைரக்டராக பணி. அந்த தொடரில் இப்போவரை நடித்துக்கொண்டுள்ளேன். இடையில் டப்பிங் யூனியன் உறுப்பினராகி சிலகாலம் சீரியல்கள் மற்றும் சினிமாவுக்கெல்லாம் டப்பிங் பேசினேன். கடந்த 4 வருடங்களாக F1 Studios(www.f1studios.co.in) என்ற பெயரில் விளம்பரப் படங்களும், விளம்பர போட்டோகிராபியும் செய்கிறேன். தற்போது ஒத்திகையில் ஈடுபட்டுள்ள நான் நடிக்கும் முதல் சபா மேடை நாடகம் ஆகஸ்டில் அரங்கேற்றம்.

சினிமாவுக்கு கதைகள் எழுதி தயார் நிலையில் யாரையும் தேடிப்போய் கதை சொல்லாமல் காத்திருக்கிறேன். நண்பனின் தொலைக்காட்சித்தொடரின் திரைக்கதையில் வேலை பார்க்கிறேன். அனுபவங்களையும் சிந்தனைகளையும் கதை கவிதைகளாக்கி நெருங்கிய நண்பர்களை பழியெடுத்துக்கொண்டிருக்கிறேன், இப்போ ப்ளாக் வாசிப்பவர்களையும்!. ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்து நோ பீஸ் ஆப் மைண்ட் என்பது மாதிரி இன்று வரை என்னோடு மல்லுக்கட்டும் என் வல்லின மெல்லின கோளாறால் பயந்து பயந்து மிகவும் தாமதித்து தொடங்கிய என் ப்ளாக் பெயர் "சிந்தனி". பல வருடங்களுக்கு முன் என் நண்பர்களோடு நடத்திய கையெழுத்து பத்திரிக்கை பெயர் சிந்தனை. அந்த பெயர் ப்ளாக்ஸ்பாட்டில் கிடைக்காததால் 'சிந்தனி'.


கறுப்புப்பட்டை வாங்கிய 1 வருடத்திலெல்லாம் கராத்தே பயிற்சியை விட்டுவிட்டு பளுத்தூக்கப்போனது, இப்போ ஒபிசிட்டியே ஆனாலும் ஓரடி கூட வாக்க மாட்டேனென்பது. மனவளக்கலை தொடங்கி TA, TM, ஓஷோ இப்போ ஈஷா, ஆல்பாஃ என தியானங்கள் கற்பதை மட்டும் பயிற்சியாக வைத்திருப்பது. கீபோர்டு கொஞ்சநாள், கிட்டார் கொஞ்சநாள் பயின்றதுடன் எதுவுமே தெரியாமல் ஒரு நாள் தடாலென மென்பொருட்களை மட்டும் வைத்துக்கொண்டு விடிய விடிய இசையமைத்தது என்பது மாதிரி தேடல்அல்லது ஆர்வக்கோளாறு என்னிடம் ஒரு குணமாகவோ குறையாகவோ தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. வாசிப்பு வழக்கமும் அதே லட்சணம்! சிலநேரங்களில் ரொம்ப சுவாரஸ்யமாக சமையல் புத்தகங்கள் படிப்பதுண்டு. பிறகு லா.ச.ராவையோ ஜெயமோகனையோ உருட்டிக்கொண்டிருப்பேன்.


முரன்பாடான பல அனுபவங்கள்! டெல்லி ராயல் சிந்தூரி மாதிரி 5 ஸ்டார் ஹோட்டல் தரங்களிலும் லஞ்ச் மீட்டிங் போயிருக்கிறேன். திடீரென சாமியாராகி திருவண்ணாமலை அனுமார் கோவில் வாசலில் பிச்சைக்காரராக இருந்த நண்பனை மீட்கப்போன இடத்தில் புண்ணியம் வேண்டி ஒரு தம்பதியினர் அங்குள்ள பிச்சைக்காரர்களுக்கெல்லாம் உணவளித்தனர். (ஒரு கலைஞனுக்கே உரிய புதராய் மண்டிய தாடி, கசங்கிய பனியன், கசாமுசாவென அணிந்த ஜீன்ஸுடனிருந்த) என்னையும் பிச்சைக்காரனாக நினைத்து அங்கிருந்த சாமியார்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களோடு சாலையோரத்தில் எனக்கும் இலை போட்டு இட்லி, சட்னி ,சாம்பார் போட்டார்கள். நல்ல பசி, 5 ஸ்டார் ஹோட்டல்கள் மாதிரியே இங்கும் ரசித்து சாப்பிட்டேன். ஆசைப்படாவிட்டாலும் அடிக்கடி என் வீடு இடம் மாறுகிறது(சென்னையின் 11 வருடத்தில் 13 ஜாகை மாற்றம்). மெனக்கெட்டு தேடியபோது கிடைக்காத அனுபவங்கள், இப்போ போதும் போதுமென்றளவுக்கு கிடைக்கிறது. முடிந்தளவுக்கு ப்ளாக்கில் பகிர்ந்து கொள்கிறேன்.

என் வலைத்தள முகவரி: http://chinthani.blogspot.com/

9 comments

Venkatesh said... @ June 29, 2009 at 1:18 AM

நட்சத்திர வாழ்த்துகள்!!

Unknown said... @ June 29, 2009 at 4:18 AM

congrats sir....

ராஜ நடராஜன் said... @ July 3, 2009 at 9:03 AM

வீடு வீடா போய் என்ன சொல்றாங்கன்னு பார்க்கிற கெட்ட பழக்கமிருந்தாலும் திரட்டிக்கு இதுவே முதல் வருகை.பிரபு சார்!நட்சத்திர வாழ்த்துக்கள்.

க. தங்கமணி பிரபு said... @ July 4, 2009 at 9:55 PM

ராஜ நடராஜன்

மிக்க நன்றிங்க. நினைச்சு கூட பாக்கல என் ப்ளாக்க இவ்வளவு பேர் வந்து படிப்பீங்க, பாராட்டுவீங்கன்னு! அதுலயுமிந்த திரட்டி நட்சத்திர அங்கிகாரம் மாபெரும் தெம்பு!

க. தங்கமணி பிரபு said... @ July 4, 2009 at 9:57 PM

Jean
Thank You Jean !!

manjoorraja said... @ July 20, 2009 at 10:26 PM

அன்பு தங்கமணி நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள்.
திரையுலகில் நல்லதொரு இடத்தையடையவும் மனமார்ந்த வாழ்த்துகள்.

கவிஞர் கங்கைமணிமாறன் said... @ May 25, 2011 at 5:33 AM

திரு.தங்கமணி பிரபு அவர்களே!
தங்களைப் பற்றி அறிந்தேன்.
சுவைபடச் சொல்லியிருந்தீர்கள்!
முடிந்தால் முயற்சி செய்;
முடியாவிட்டால் பயிற்சி செய்!
என்னும் -
தன்னம்பிக்கை மொழிப்படி
தளராது முயன்று பயின்று வெல்க!
இயன்றால்.. என் வலைத் தளம் சென்று
கருத்தினைப் பகிர்க!
கவிஞர் கங்கை மணிமாறன்
முகவரி;gangaimanimaran.wordpress. com

கவிஞர் கங்கைமணிமாறன் said... @ May 25, 2011 at 5:34 AM

திரு.தங்கமணி பிரபு அவர்களே!
தங்களைப் பற்றி அறிந்தேன்.
சுவைபடச் சொல்லியிருந்தீர்கள்!
முடிந்தால் முயற்சி செய்;
முடியாவிட்டால் பயிற்சி செய்!
என்னும் -
தன்னம்பிக்கை மொழிப்படி
தளராது முயன்று பயின்று வெல்க!
இயன்றால்.. என் வலைத் தளம் சென்று
கருத்தினைப் பகிர்க!
கவிஞர் கங்கை மணிமாறன்
முகவரி;gangaimanimaran .wordpress .com.

கோவை செய்திகள் said... @ July 23, 2011 at 7:50 AM

வணக்கம்...... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

Post a Comment