| 13 comments ]


ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி எந்தக் கணிப்பொறியிலும் தட்டச்சுச் செய்யலாம்.ஆனால் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி ஒரு கணிப்பொறியில் தட்டச்சுச் செய்தால் அந்த எழுத்துகளை வேறொரு கணிப்பொறி படிக்காது.அவ்வாறு படிக்க முடியாததால் ஒருவர் உருவாக்கிய செய்தி மற்றவருக்குப் பயன்படாமல் இருந்தது.அனைத்து கணிப்பொறிகளும் புரிந்துகொண்டு படிக்கும்படியான ஒருங்கு குறி(யுனிகோடு) வடிவம் இருந்தால் நல்லது என்ற நிலையைத் தமிழ்க் கணிப்பொறி நுட்பம் அறிந்த வல்லுநர்கள் அறிந்தார்கள்.
மலேசிய கடைத் தெருக்களில் இருந்த இணைய உலவி நடுவங்களுக்குச் சென்ற கணிப்பொறி வல்லுநர் சீனமொழிக்காரர்கள் எந்த இடையூறும் இல்லாமல் அவர்களின் தாய்மொழியான சீனமொழியில் தட்டச்சுச் செய்தனர்.எழுத்துருச் சிக்கல் அவர்களுக்கு இல்லை.தமிழில் அவ்வாறு செய்யமுடியவில்லையே என அவர் உள்ளம் ஏங்கியது.தமிழர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் தமிழ் எழுத்துகளைத் தட்டச்சுச் செய்ய வேண்டும் அதற்குரிய மென்பொருளை உருவாக்க வேண்டும் என அந்த உள்ளம் நினைத்தது. தன்னுடன் பணிபுரிந்த நண்பர்களின் ஒத்துழைப்பு,ஊக்க உரைகளால் ஒருங்குகுறி வடிவில் தட்டச்சிடும் ஒரு விசைப்பலகையை அந்த இளைய உள்ளம் கண்டுபிடித்தது.

தன்னலங் கருதாமல் தமிழ்நலம் கருதி இலவசமாக வழங்கிய அந்த மென்பொருள்தான் இ.கலப்பை எனபதாகும்.இதனை இணையத்திலிருந்து இலவசமகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழில் நிலவி வந்த எழுத்துரு சிக்கலுக்குத் தீர்வு சொன்ன இந்த இ.கலப்பையை உருவாக்கியவர் இளைஞர் முகுந்தராசு அவர்கள்.இணைய உலகில் முகுந்த் என்று அறிமுகமான பெயர்.

பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் உருவாக்கும் வல்லுநராக இருக்கும் இவர் பிறந்தது நாமக்கல் அருகில் உள்ள சேந்தமங்கலம் என்பது ஆகும். தந்தையார் சுப்பிரமணியனார் அவர்கள் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.தாயார் அமராவதி அவர்கள்.25.12.1972 இல் பிறந்த முகுந்தராசு அவர்கள் சேந்தமங்கலத்திலும் சைனிசு பள்ளியிலும் பள்ளியில் படித்தவர்.கரூர் அரசுக்கல்லூரியில் இயற்பியல் முதலாண்டு படித்த முகுந்து சென்னை விவேகானந்தர் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு
செய்தார்.பின்னர் அண்ணாபல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட எம்.ஐ.டி கல்லூரியில் பி.டெக் படிப்பை நிறைவு செய்தார்(1994-97).படிப்பு நிறைவுற்றதும் இராம்கோ நிறுவனத்தில் (1997-2000)சென்னையிலும், பின்னர் மலேசியாவிலும்(2001-04) பணிபுரிந்தார்.

மலேசியாவில் பணிபுரிந்தபொழுது இணைய உலகில் பல நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள்.பாலா பிள்ளை போன்றவர்கள் தமிழ் ஒருங்கு குறியின் தேவையை வலியுறுத்தி ஊக்கப்படுத்த இ.கலப்பை உருவாக்கும் பணி தொடங்கியது அதற்கு முன் கிமன்,[கீமேன்]எழுத்துரு உள்ளிட்ட மூன்று பொருள்களை நம் கணிப்பொறியில் பதிவிறக்கிய பின்னரே தமிழில் தட்டச்சிட முடியும்.கீமேன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி யாரும் உடனடியாக நிறுவிக்கொள்ளும்படியான எளிய தொழில்நுடபத்தில் அமைந்த இ.கலப்பையை முகுந்து உருவாக்கி இலவசமாக உலகிற்கு வழங்கினார்.

முகுந்து அவர்கள் தமிழ்ப்பற்றும் இன உணர்வும் நிறைந்த இளைஞர்.தமிழகமக்களின் பொருளாதார,கல்வி நிலைகளை நன்கு உணர்ந்தவர்.இத்தகு மக்கள் முன்னேற்றும் கருதி கிமேன் நிறுவனத்திடம் பேசி அவர்களின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள 400 டாலர் நண்பர்களிடம் திரட்டி அவர்களிடம் உரிமைபெற்று இலவசமாக நமக்குக் கிடைக்கச்செய்தவர்.

முகுந்து அவர்களின் முயற்சிக்கு சுரதா யாழ்வாணன்,உமர்தம்பி, அரிகிருட்டிணன் உள்ளிட்டவர்கள் துணைநின்றனர்.முகுந்து இ.கலப்பையின் இரண்டாம் பதிப்பை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார். இ.கலப்பை எக்சு.பி என்னும் மென்பொருளில் இயங்குகிறது.விசுடா என்ற நிலையில் இப்பொழுது இயங்கவில்லை.அதன் குறையை நீக்கி விசுடாவிலும் செயல்படும் வண்ணம் இ.கலப்பை இரண்டாம் பதிப்பு வெளியிடும் முயற்சியில் உள்ளார். 2001-2004 வரை தமிழ்த் தட்டச்சை எளிமைப்படுத்தியது இ.கலப்பை எனில் மிகையன்று.இ.கலப்பையின் தொழில் நுட்பம் சார்ந்து இன்று என்.எச்.எம் என்னும் மென்பொருள் வெளிவந்துவிட்டது.இது இ.கலப்பையில் உள்ள குறைகள் களையப்பட்ட வடிவமாக உள்ளது.வேறொரு நிறுவனத் தயாரிப்பாக இது இருந்த போதிலும் இதனை மகிழ்ச்சியடன் வரவேற்கிறார் முகுந்து.

போட்டிகள் இருந்தால்தான் பொருள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.அந்த வகையில் போட்டிப் பொருள்கள்,போட்டி வணிகம் தேவை என்கிறார் முகுந்து.இவ்வாறு இலவச மென்பொருள்கள் வந்தபிறகுதான் பல மென்பொருள்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கும்படியாக, மக்கள் அதிகம் பயன்படுத்தும்படியாக ஆனது என்கிறார்.முகுந்து சொல்வது மிகச்சரியாகும்.எழுத்துருக்கள் அடங்கிய மென்பொருள்கள்,செயலிகள் முன்பு மிக அதிக விலையில் விற்றன.இன்றைய கணிப்பொறி விலைக்கு முன்பு மென்பொருள்களின் விலை இருந்தது.இன்று பல நிறுவனங்கள் இலவசமாகவே பல சேவைகளை வழங்குகின்றன.(சுரதா.காம் வழங்கும் உலக அளவிலான மொழிமாற்றிச் சேவையைப் பற்றிப் பின்பு எழுதுவேன்)

தமிழ் என்பது நம் அடையாளம்.தமிழில் முடியாது,தமிழால் முடியாது என்றால் நம் தமிழர்களால் முடியாது என்று பொருள்.எனவே தமிழால் முடியும்,தமிழரால் முடியும் என்று காட்டவே இம்முயற்சிகளில் ஈடுபட்டேன் என்கிறார் இத் தமிழ்ப்பற்றுடைய கணிப்பொறி வல்லுநர்.தமிழில் அனைத்து வசதிகளையும் மைக்கரோசாப்டு உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றால் தமிழை அனைவரும் பயன்படுத்த வேண்டும் .தமிழ் அனைத்துத் துறைகளிலிலும் பயன்படுத்தப்படுகிறது என்ற நிலையை உணர்ந்தால் முன்னணி நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள தமிழில் அனைத்துச் சேவைகளையும் வழங்க முன்வரும்.

வங்கிகள் தமிழில் இயங்கவேண்டும்.தானியங்கி பணமெடுக்கும்பொறிகள்(ஏ.டி.எம்),செல்பேசிகள்,தமிழக அரசின் ஆட்சிஅலுவல்கள்,உள்ளாட்சி நிருவாகம்,பள்ளி,கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களின் நிருவாகம்,நீதிமன்றச்செயல்பாடுகள் அனைத்தும் தமிழில் இயங்கினால் தமிழில் அனைத்து வசதிகளும் கணிப்பொறியிலும் இணையத்திலும் வந்துவிடும்.தமிழக வணிகர்கள் தங்கள் நாட்டிற்குள் தகவல் பரிமாற்றத்திற்கு இன்னும் ஆங்கிலத்தைக்கட்டி அழுகின்றனர்.இணையத்தை அதிகம்பேர் பயன்படுத்துகின்றனர் என்பதால் முன்னணி இதழ்கள் பலவும் ஒருங்குகுறிக்கு மாறிவிட்டன.இணையப்பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னும் ஒருங்ககுகுறிக்கு மாறாமல் உள்ளது வியப்பாக உள்ளது.

இருக்கும் இடங்களை வைத்துக்கொண்டு ஒருங்குகுறியில் எழுதுவதுதான் இன்றைய தேவையாகும்.தமிழுக்கு அதிக இடம் தருவதில் தயக்கம் காட்டும் ஒருங்குகுறி மேலாண்மையகம் (கன்சார்டியம்) தமிழ்ப்பயன்பாடு அதிகரித்தால் தானே இடம்கொடுக்கும்.தமிழக அரசின் மடல்கள் அனைத்தும் தமிழ் ஒருங்குகுறியில்தான் அனுப்பவேண்டும் என ஓர் ஆணையிட்டால் தமிழகம் முழுவதும் தமிழ் ஒருங்குகுறி பயன்பாட்டிற்கு வந்துவிடும்.இருக்கும் இடத்தை வைத்துக்கொண்டு தமிழ்ப்படைப்புகள் இன்று உலகில் வலம் வருகிறது.

திரைப்படச் சீட்டுப்பதிவு, பேருந்துச் சீட்டுப்பதிவு,தொடர்வண்டிச் சீட்டுப் பதிவு என அனைத்திலும் தமிழ்ப்பயன்பாடு வரின் கணிப்பொறியில் எழுத்துச் சிக்கல் ஒரு காரணமே இல்லை.இன்னும் அறியாமையால் சில இதழ்களும்,நிறுவனங்களும் ஒருங்குகுறியில் எழுதாமல் உள்ளது அவர்களுக்கு இழப்பே தவிர தமிழுக்கு இல்லை.தொழில் நுட்பச்சிக்கல்களைத்ததீர்ப்பது கணிப்பொறிப்பொறியாளர்களின் வேலையாகும் பயன்படுத்துவது தமிழர்களின் கடமையாகும்.உலக்கதமிழர்கள் ஒருங்கு குறியில் எழுதி உலகை வலம் வருகின்றனர்.அவர்களைப் பின்பற்றி இணையத்தமிழ் வளர்ப்போம்...

-முனைவர் மு. இளங்கோவன்

இன்றைய தமிழ்ஓசை இதழில் வெளியான கட்டுரை...

13 comments

கூடுதுறை said... @ May 31, 2008 at 9:50 PM

இ.கலப்பை தமிழ்பதிவுலகில் ஒரு பெரும்புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரு.முகுந்த் அவர்கள் எனது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமைப்படுகிறேன்

முகுந்த் அவர்களின் இச்சேவை தொடரட்டும்

இளைய கவி said... @ May 31, 2008 at 10:07 PM

இ.கலப்பை இல்லை எனில் இன்றி வலை உலகில் நான் இல்லை. நான் வலை உலகில் வாழக்காரணம் இ.கலப்பை என்றால் மிகையாகது. இ.கலப்பை தந்த வள்ளல் பெருமக்களே வாழீர் நீர் பல்லாண்டு. எனது சிரந்தாழ்ந்த பணிவான நன்றிகள்

ஆ.கோகுலன் said... @ May 31, 2008 at 10:08 PM

நானும் ஒரு இ.கலப்பை பயனாளன் என்றவகையில் திரு.முகுந்த் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

- யெஸ்.பாலபாரதி said... @ May 31, 2008 at 10:56 PM

நானும் கூட எ-கலப்பையால் தான் கணினி தமிழ் கற்றுக்கொண்டேன். இன்று இணையத்திலும் இணையத்துக்கு வெளியிலும் பலர் எ-கலப்பை பாவிப்பதை பார்த்தவன் நான். முகுந்த் அண்ணன், பழகவும், பயிற்சி வகுப்பு எடுக்கவும் மிகவும் இனிமையானவர். அதனை நேரில் இருந்து ரசித்தவன் நான். தொடர்ந்து திறவுற்றுப் பொருட்களை பயன்படுத்துவதை வலியுறுத்தி வருபவர் என்பது கூடுதல் சிறப்பு.
இணையம் உள்ள வரை இவர்களின் சேவை நினைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

மஸ்தூக்கா said... @ June 1, 2008 at 2:37 PM

இது எ-கலப்பையா அல்லது இ-கலப்பையா? எந்தக் கலப்பையாக இருந்தாலும் இந்தக் கலப்பை தமிழ் இணையம் என்னும் மண்ணில் எழுத்து ஏர் உழுவதற்கு ஏற்ற அருமையான கலப்பை என்பதில் சந்தேகம் இல்லை.
தன்னலம் கருதாது தமிழ்கூறுநல்லுகப் பயன்பாட்டுக்குப் பாடுபட்ட இத்தமிழ் உள்ளங்களை இணைய தமிழ் உலகம் என்றென்றும் வாழ்த்தும்.
நன்றியுடன் எமது 'தமிழ் இணைய நண்பன்' தளத்தில் இணைத்துள்ளேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said... @ June 9, 2008 at 12:04 AM

electronic kalappai = e-kalappai = எலக்ட்ரானிக் கலப்பை = எ-கலப்பை. எறும்புகள் குழுமத்தின் உந்துதலில் உருவானதாக முகுந்த் சொல்வார். எனவே எ-கலப்பை என்பது எறும்புகள் கலப்பை என்பதையும் சுட்டலாம். ஆங்கிலத்தில் e-kalappai சரி. தமிழில் இ-கலப்பை என்பது தவறு.

தமிழ்க் கணிமையில் எ-கலப்பையின் பங்கு முக்கியம். நன்றி.

Srinivasan M.R. said... @ June 12, 2008 at 6:28 PM

எ-கலப்பை மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள். கணினியை தமிழில் பயன்படுத்த எ-கலப்பையை எல்லோருக்கும் பரிந்துரை செய்யலாம்.
ஸ்ரீனிவாசந் கோவை

GIRIJAMANAALAN said... @ June 13, 2008 at 12:38 AM

இணையதளங்களில் புகும் என் போன்ற எழுத்தாளர்களுக்குப் பயன்படும்படியாக இந்த எழுத்துருவை அமைத்துக்கொடுத்த திரு, முகுந்த் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
- கிரிஜா மணாளன்
திருச்சிராப்பள்ளி.

முனைவர் மு.இளங்கோவன் said... @ June 17, 2008 at 6:31 PM

திரு.இரவிசங்கர் அவர்களுக்கு,
எறும்புகள் கலப்பை, எ.கலப்பை எனத் தகவல் தந்தமைக்கு நன்றி.
மு..இளங்கோவன்

nagai said... @ September 22, 2008 at 9:26 AM

please tell the download address

Venkatesh said... @ September 22, 2008 at 6:31 PM

இ.கலப்பை தரவிரக்க
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

Thiru said... @ October 1, 2008 at 10:44 AM

இ-கலப்பை எனும் மென்பொருளை இணைய உலகத்திற்கு கொடுத்த உங்களுக்கும் உங்களின் குழு உறுப்பினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி....வாழ்க தமிழ்.

Thiru said... @ October 1, 2008 at 10:45 AM

இ-கலப்பை எனும் மென்பொருளை இணைய உலகத்திற்கு கொடுத்த உங்களுக்கும் உங்களின் குழு உறுப்பினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி....வாழ்க தமிழ்.

Post a Comment